மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் தான் மண்டாடி. இது ஒரு ஆக்ஷன் படம். உணர்வுகளுடன் கூடிய ஆழமான கதை அம்சம் கொண்டது. இப்படத்தின் மூலம் சூரி தனது திரையுலக வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத்குமார், சாச்சனா நமிதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சத்யராஜ் சூரிக்காகவே நடிப்பதாகத் தெரிவித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் மதிமாறன் புகழேந்தி சொல்லும்போது சூரியின் கதை தேர்வு என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மண்டாடி படம் அவரது திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமையும். இந்தக் கதையில் வரும் அவரது கதாபாத்திரத்துக்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. உடல் மற்றும் மனவலிமையும் வேண்டும். அதை சூரி போன்ற நடிகர்களால் மட்டுமே முழுமையாகக் கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அது சரி படத்தின் தலைப்பு என்ன மண்டாடி? அதுக்கு என்ன அர்த்தம் என்று இப்போது கூகுளைத் தேடுபவர்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது.
இது தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் பாஷை. மண்டாடின்னா அவங்களோட விளக்கம் இதுதான். காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் துல்லியமாகக் கணிப்பவர்கள் தான் அந்த மீனவர்கள். அவர்கள் மீன்களின் வரத்து, அவற்றின் திசைவழிப் போக்குப் பற்றியும் கணிக்கும் அறிவுத்திறன் படைத்தவர்கள். இப்படிப்பட்ட அனுபவம் பெற்றவர்கள் தான் மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமைப் பொறுப்பில் இருப்பார்.
இவரைத்தான் மண்டாடின்னு சொல்றாங்க. அதே போல பாய்மரகுப் படகுப் போட்டிக்கும் இந்த மண்டாடி தான் முக்கியம். அதையே கதைகளமாகக் கொண்டு உருவாவதுதான் சூரியின் மண்டாடி. படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சூரியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் காதல், விடாமுயற்சி, மீட்பு, விளையாட்டு என பல உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் இருக்கிறதாம்.