ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஆனால் போர் நிறுத்தத்தை மீறியும் அன்று மாலையே பாகிஸ்தான் திடீரென தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேசிய ஊடகம் ஒன்றுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் சுற்றுலா பகுதியான பஹல்காம் மிகவும் பாதிப்பை பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில் இந்த தாக்குதல் காரணமாக அனைத்தும் அழிக்கப்பட்டன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல நிலைக்கு வந்த சுற்றுலாத்துறை மீது தற்போது பாகிஸ்தான் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நேரம் தான் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். எனவே காஷ்மீர் வாழ் மக்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய நேரம் இதுதான்.
ஒரு நாளைக்கு 50 முதல் 60 வாகனங்கள் வரும் நிலையில் போர் பதற்றம் காரணமாக தற்போது அவை வெறிச்சோடி காணப்படுகிறது என்று வேதனையுடன் கூறினார்.