“பொள்ளாச்சி பாலியல் வழக்கு….” தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்…. 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுங்க…. தவெக தலைவர் விஜயின் அறிக்கை….!!
SeithiSolai Tamil May 14, 2025 04:48 AM

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக
இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.