#featured_image %name%
உலகின் பெரியண்ணன் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது கடந்த இரு நாட்களாக இந்திய சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்படும் நபராக மாறிவிட்டார். அவரது காமெடிக்கு அளவே இல்லையா என்ற கேள்விகள் அதிகம் முன்வைகப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வது பொய் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செயலர் மறுப்பு தெரிவித்து, ட்ரம்ப் ஒரு பொய்யர் என்றும் பேர் வாங்கி விட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படும் முன் வரை, அதிபர் ட்ரம்ப் மரியாதை மிகுந்தவராகவே பார்க்கப்பட்டார். குறிப்பாக, பஹல்காம் தாக்குதல் நடந்த போதும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்ட போதும், டிரம்ப், ஜே டி வான்ஸ் ஆகியோர் இந்திய பாகிஸ்தான் இரு தரப்பு சசசரவுகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஒதுங்கிக் கொண்டிருந்தவரை.
ஆனால் திடீரெனறு, மே 10 அன்று காலையில் அவர் சமூகத் தளப் பதிவில், இந்திய பாகிஸ்ஹான் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன் என்றும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதைத் தடுத்து விட்டேன் என்றும் குறிப்பிட்டு அதற்கு அவர் சொன்ன காரணம் தான் பேசுபொருளானது.
“இந்த வாரத்தில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத மோதல் ஏற்பட இருந்ததை எனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. அது மிகவும் மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கும். பல லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துணை அதிபர் வேன்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆகியோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.நிலைமையின் தீவிரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
“அவர்களுக்கு நாங்களும் உதவி செய்தோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறோம், எனவே இந்த போரை நிறுத்திக்கொள்வோம் என்று கூறினேன். நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் நான் உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று கூறினேன். இந்த வகையில் வர்த்தகத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அப்படிக் கூறிய உடனே அவர்கள், போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார்கள். அது நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதிலுள்ள கடைசி இரண்டு வாக்கியங்கள் தான் இந்தியர்களிடம் கேலிபேசும் பொருளாகிவிட்டது. குறிப்பாக, இந்தியா திடீரென தாக்குதலை நிறுத்திக் கொள்வதாகவும், இரு தரப்பு டிஜிஎம்ஓ.,க்கள் பேசிக் கொண்டதில், ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே டிரம்ப் சமூகத் தளத்தில் பதிவு செய்த கருத்தையும் விதத்தையும் பார்த்து, பிரதமர் மோடி, தனது நண்பர் என்பதற்காக டிரம்ப்பிடம் அடிபணிந்து விட்டார். பாகிஸ்தானை பதம் பார்க்கும் வகையில் துடிப்புடன் ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருந்த போது மோடி இவ்வாறு செய்ததை ஏற்க முடியவில்லை என்று தங்கள் கருத்தைத் தெரிவித்த் வந்தனர்.
ஆனால் பின்னணியில் ஏதோ பெரிய அளவில் தாக்குதல் நடந்திருக்கிறது என்பதை மட்டும் அனுமானித்தார்கள். அது அணுக் கசிவு என்ற சந்தேகம் வரை இப்போது கொண்டு வந்திருக்கிறது.
எனினும் அமெரிக்க அதிபரின் முந்திரிக்கொட்டைத் தனத்தை இந்தியாவில் எவரும் ரசிக்க வில்லை. அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு சிரித்தார்கள். அதற்கு ஏற்ப,
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது இந்தியா கூடுதல் வரி விதித்துள்ளதாக செய்தி வெளியானது.
மேலும், ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை, பல முறை அமெரிக்க தலைவர்கள், நமது தலைவர்களுடன் பேசினர். இதில், வர்த்தகம் தொடர்பான எந்த விவாதமும் இடம் பெறவில்லை என்று உறுதிபடக் கூறினார், இந்திய வெளியுறவுச் செயலர் ரந்திர் ஜெய்ஸ்வால். ‘போர் நிறுத்தம் செய்யாவிடில், வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என்று, தான் கூறிய பிறகே போர் நிறுத்தம் ஏற்பட்டது’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மாறாக, அவ்வாறு எந்நேரமும் இந்தப் பேச்சு அதுவரை எழவில்லை என்றும், ஏன் திடீரென்று இவ்வாறு டிரம்ப் கூறினார் என்பதிலும் பலருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.
இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் தேவையின்றி அமெரிக்கா வார்த்தையை விடுவதால், அந்த நாட்டிற்கு இந்தியா ஒரு கொட்டு வைத்துள்ளதாக தெரிகிறது என்று குறிப்பிட்டு, அதனால் தான் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதிக்கு கூடுதல் வரி இந்தியா விதித்தது என்றும் கருத்துகள் பரவின.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஸ்வால் பல்வேறு ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தகவல்களைத் தெரிவித்தார்.
“காஷ்மீர் குறித்து எந்த பிரச்னையாக இருந்தாலும் இந்தியாவும், பாகிஸ்தான் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை விடுவிப்பதுதான் நிலுவையில் உள்ள பிரச்னை.
“மே 10ம் தேதி காலை முக்கிய இடங்களில் வலிமையான தாக்குதலை நடத்தியிருந்தோம். 3:35க்கு டிஜிஎம்.,வை பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் வேண்டி பேசினார். சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் நல்லெண்ணம் அடிப்படையில் அந்த ஒப்பந்தம் உருவானது. அது (அப்படி எந்த நல்லெண்ணமும்) இப்போது இல்லாத காரணத்தினால் நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு சரியான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.
“மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் துவங்கியது முதல் முதல் 10ம் தேதி போர் நிறுத்தம் ஏற்படும் வரை, இந்தியா அமெரிக்கா இடையே ராணுவ சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவாதத்தில் வர்த்தகம் ஏதும் வரவில்லை.
“பயங்கரவாதிகளை தொழில்முறையில் வளர்த்த நாடு, அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என நினைப்பது தன்னைத்தானே முட்டாள் ஆக்கிக் கொள்வதாகும். இந்தியா அழித்த பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்பு தளங்கள் இந்தியர்களின்மரணத்திற்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுதும் உள்ள பல அப்பாவிகளின் மரணத்திற்கும் காரணமாக இருந்தவை..
பஹல்காமில் தாக்குதலை நடத்தியது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டிஆர்எப் அமைப்பு. பலமுறை இதனை விளக்கி உள்ளோம். டிஆர்எப் அமைப்பு பற்றி ஐ.நா., அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம். அது எந்த மாதிரியான தகவல் என்பதை இப்போது கூற முடியாது. இந்தியா அளித்த தகவலின் பேரில் ஐ.நா., நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். எங்களின் நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே! பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு தாக்குதல் நடத்துவோம். இந்தியாவின் நிலைப்பாடு ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் நிலைப்பாடு 10ம் தேதி விமான தளங்களை தாக்கிய பிறகு மாறி இருக்கிறது.
இந்தியாவின் தாக்குதலினால் சேதமடைந்த இடங்களைக் குறித்த புகைப்படங்கள் செயற்கைக்கோள் மூலம் கிடைக்கிறது. இதன்மூலம் பாதிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். நாம் அழித்த இடங்களின் படங்களை வைத்தே, பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று அந்நாட்டு அமைச்சர் கோஷமிட்டார். கார்கில் போரின் போதும் இப்படித்தான் வெற்றி பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆபரேஷன் சிந்தூர் காரணமாக, பஹவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் சில இடங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. முக்கிய விமான தளங்கள் செயலிழந்தன. இதனை சாதனை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நினைத்தால், அதனைக் கொண்டாடலாம்.
பாகிஸ்தான் ராணுவம் அமைதியாக இருந்தால் பிரச்னை இருக்காது. அவர்கள் தாக்குதல் நடத்தினால் நாமும் கடினமான தாக்குதலை நடத்துவோம். 9ம் தேதி இரவு வரை இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்கியது. அவர்களின் முயற்சி தோல்வி அடைந்த உடன் 10ம் தேதி அவர்களின் குரல் மாறியது. பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ நம்மை தொடர்பு கொண்டார். அதன்பிறகே தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக நாமும் தெரிவித்தோம்… – என்று ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் தெளிவாக விளக்கினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம், அமெரிக்க அதிபருக்கு ஒரு பதில், பாகிஸ்தானுக்கு பல பதில்கள் அளித்து, உலகத்துக்கு உண்மை என்ன என்பதை புரியவைத்தார் ஜெய்ஸ்வால். என்றாலும், காலையில் ஒன்று பேசி, மாலையில் வேறு பேசப்பட்டு, அமெரிக்க அதிபருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அவரை கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர் சமூகத் தளங்களில்!
News First Appeared in