#featured_image %name%
— ஆர். வி. ஆர்
முதலில் ‘உடான்ஸ்’ பற்றி ஒரு பொருள் விளக்கம்: அது ஒரு கேலிச் சொல். தன் தவற்றை மறைக்க ஒருவர் சொல்லும் எளிதான பொய்யை, நடத்தும் பேரணியை, ‘உடான்ஸ்’ என்று தள்ளலாம்.
‘இந்திய ராணுவத்துக்குத் துணை நிற்போம்’ என்ற பெயரில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது தலைமையில் இந்த மே மாதம் 10-ம் தேதி சென்னையில் ஒரு பேரணி நடத்தினார் – நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு. இதன் பின்னணி என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சென்ற ஏப்ரல் 22-ம் தேதி ஒரு பயங்கரவாதம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அனுப்பிய நான்கு பயங்கரவாதிகள் அந்த ஊருக்கு வந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹிந்துக்கள் என்பதை அவர்களிடமே கேட்டறிந்து அவர்களில் 25 ஆண்களை – இந்தியர்கள் 24, நேபாளி 1 – அவர்களின் மனைவி குழந்தைகள் முன்னிலையில் படுகொலை செய்தனர்.
பாதகம் செய்த பாகிஸ்தான் மீது, மே 7-ம் தேதி அதிகாலையில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் துவங்கியது இந்தியா. அன்று விடிவதற்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை இந்திய ஏவுகணைகள் தகர்த்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை மேலோகம் அனுப்பின. அன்றைய தினமே மோடியின் துணிவு மிக்க அரசியல் தலைமை உலகெங்கும் ஒளிர்ந்தது.
அடுத்த நாளில் (மே 8) பாகிஸ்தானின் சில ஊர்களில் இருந்த வான்வெளிப் பாதுகாப்புக் கட்டமைப்பை இந்தியா சின்னாபின்னம் செய்தது. இடையில் நமது ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததையும் முறியடித்தது இந்தியா.
இந்த நிலைமையில், மூன்றாவது நாளான மே 9-ம் தேதி காலை ஸ்டாலின் தனது பேரணியை அறிவித்தார். அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார்?
“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நாம் ஆதரவை வெளிபடுத்தும் நேரம் இது” என்று சொல்லிய ஸ்டாலின், அதற்காக மறுநாள் மே 10-ம் தேதி மாலை 5 மணிக்குச் சென்னையில் ஒரு பேரணி நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி பேரணி நடத்தினார்
மே 10-ம் தேதி அன்று, ஸ்டாலின் தனது பேரணியைத் துவங்குவதற்கு முன்பாக, இந்தியா தனது ஏவுகணைகளைச் செலுத்தி பாகிஸ்தானின் 11 ராணுவ விமானத் தளங்களைத் துவம்சம் செய்தது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய பாகிஸ்தான், மே 10-ம் தேதி பிற்பகலில், இந்தியாவை அழைத்துப் போர்நிறுத்தம் கேட்டு அழுதது. அதன்படி அன்று மாலை 5 மணியிலிருந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல் செய்ய ஒப்புக் கொண்டு அதன்படி போர் நின்றது. அன்று மாலை ஸ்டாலின் அவரது பேரணியில் நடந்த போது, பாதி வழியிலேயே போர் நிறுத்தம் ஏற்பட்டதையும் அறிந்திருப்பார்.
இந்தப் போர் அதி விரைவில் முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், தொடக்கத்திலிருந்தே இந்தியா பாகிஸ்தானை ராட்சசப் புரட்டு புரட்டி அதற்குக் கைகால் விளங்காமல் செய்தது. இன்னொரு முக்கியக் காரணம்: அத்தகைய போர் நடவடிக்கைக்கான ஒப்புதலை அளித்து, அதன் விளைவுகளுக்கான பொறுப்பையும் தானே ஏற்கும் அரசியல் துணிவு பிரதமர் மோடியிடம் இருந்தது என்பதாகும்.
போர் விஷயத்தில் ஸ்டாலின் மோடியை ஒரு வார்த்தை கூடப் பாராட்டவில்லை. ஏதோ நமது முப்படைகளின் தளபதிகள் பாகிஸ்தான் மீது இன்ன தேதியில் இன்ன தாக்குதல்கள் நடத்தவேண்டும் என்று தாமாகவே திட்டம் வகுத்து அவர்களாகவே செயல்பட்டார்கள், மோடி பல்லுப் போன கொள்ளுத் தாத்தா மாதிரி ஓரத்தில் அமைதியாக படுத்துத் தூங்கினார் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?
பேரணி பற்றி ஸ்டாலின் அறிவித்த வார்த்தைகளைப் பாருங்கள். பாகிஸ்தான் ‘தீவிரவாதத்தை’ வளர்த்தெடுத்து இந்தியாவில் ‘அத்துமீறல்கள்’ செய்கிறதாம். அதற்காக வீரத்துடன் பாகிஸ்தானுடன் போர் புரியும் நமது ராணுவத்திற்கு நாம் ஆதரவாக நிற்கும் நேரம் இதுவாம். அதன் பொருட்டு ஸ்டாலின் பேரணி நடத்துகிறாராம்.
பாகிஸ்தான் தனது நாட்டில் பாலூட்டி வளர்ப்பது பயங்கரவாதம் (terrorism) – அது வெறும் தீவிரவாதம் (extremism) அல்ல. ஒன்று சிறுத்தை, மற்றது ஓநாய். தனது பேரணி அறிவிப்பில் பயங்கரவாதத்தின் பெயரைக் கூடச் சொல்ல ஸ்டாலினுக்கு என்ன பயம்? இதில் பம்முவதால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை ஈர்க்க முடியும் என்று நினைக்கிறாரா ஸ்டாலின்?
அடுத்து, பஹல்காமில் பாகிஸ்தான் பாதகர்கள் செய்தது ஸ்டாலின் பாஷையில் ‘அத்துமீற’லாம். “உன் மதம் என்ன?” என்று சுற்றுலாப் பயணிகளைக் கேட்டு அவர்கள் ஹிந்துக்கள் என்று அறிந்து அவர்களை சுட்டுக் கொன்றார்கள் அந்தப் பயங்கரவாதிகள். அந்தக் கிராதகர்களின் அப்பட்டமான மத வெறுப்பைக் கண்டனம் செய்யாமல், அவர்கள் ஏதோ கையை ஆட்டி சுற்றுலாப் பயணிகளைப் “போ போ” என்று ஊரை விட்டு விரட்டி விட்டார்கள், அதுதான் அவர்கள் செய்த ‘அத்துமீறல்’ என்பது மாதிரிச் சொல்கிறாரே ஸ்டாலின்?
போரிட்ட நமது முப்படை வீரர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இதில் சந்தேகம் இல்லை. போருக்குப் பின் மே 12-ல் டி.வி மூலம் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் மோடியும் நமது படைவீரர்களுக்கு, விஞ்ஞானிகளுக்கு மற்றும் உளவுத் துறையினருக்கு சல்யூட் வைத்தார். அது மோடியின் பணிவாலும் பண்பாலும் வந்த சல்யூட். அதாவது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் என்ற முறையில், போர் வெற்றியில் தனக்கு இயல்பாகக் கிடைக்கும் பெருமையைப் போரில் ஈடுபட்ட இந்தியப் படை வீரர்களுக்கும் நமது வெற்றிக்குப் பங்களித்த பிறருக்கும் கொடுத்தார் மோடி. அது மெச்சத் தக்கது. ஆனால் ஸ்டாலின் விஷயம் வேறு.
மோடியை எதிலும் எப்போதும் தனது அரசியல் எதிரியாகப் பார்க்கும் ஸ்டாலின், மோடிக்கு என்ன பெருமை சேர்ந்தாலும் அதை உதாசீனம் செய்வதில் அற்ப திருப்தி கொள்வார். ஆகையால் போர் விஷயத்தில் மோடிக்கு உரித்தான பாராட்டை ஸ்டாலின் சிறிதும் வெளிப்படுத்தவில்லை.
இப்படியும் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் ஸ்டாலின் என்ன சொல்வார்? ராஜ ராஜ சோழன் என்பரா, இல்லை சோழ நாட்டுக் கொத்தனார்கள் என்று பதில் சொல்வாரா?
ஒரு நாட்டின் படைவீரர்களுக்குத் தில்லும் திறமையும் இருக்க வேண்டும். அவர்களிடம் முறையான ஆயுதங்களும் தளவாடங்களும் இருக்க வேண்டும். அதற்கும் மேலாக, போர் என்று வந்தால் நாட்டின் போர்ப்படைத் தளபதிகளின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை ஊக்கப் படுத்தி அவர்கள் பின்னால் வலுவாக நிற்கும் ஒரு அரசியல் தலைவனும் அந்த நாட்டிற்குத் தேவை. இந்த நேரத்தில் மோடி அப்படி ஒரு தலைவனாக இருக்கிறார். இது ஸ்டாலினுக்குப் புரியுமா?
கடைசியாக ஒன்று. உண்மையில் ஸ்டாலின் எதற்குத் தனது பேரணியை நடத்தினார்? காரணம் உண்டு.
பயங்கரவாத பாகிஸ்தானுக்கு மோடி செமத்தியாகப் பாடம் புகட்டியதற்காக, அவருக்கு இந்திய மக்கள் நன்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதில் தேச உணர்வும் கலந்து வருகிறது. தாமும் இப்போது தேச உணர்வை வெளிப் படுத்தியது போல் இருக்கட்டும், அதே சமயம் முனகலாகக் கூட மோடிக்கு பாராட்டு சொல்லக் கூடாது, என்று நினைத்து ஒரு மலிவான நாடகத்தை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். தனது பேரணிக்காக ஸ்டாலின் சொன்ன காரணத்தை, அவரது பேரணியை, எப்படி எடுத்துக் கொள்வது? வேறென்ன? உடான்ஸ்!
Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com
News First Appeared in