மைசூரு அருகே காவிரியாற்றில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பனின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 70.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஏஆர்) இயக்குநராக இருந்தவர் கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சுப்பண்ணா ஐயப்பன். நாட்டின் மீன் வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றிய 'நீலப்புரட்சி'க்கு வித்திட்டவர்களில் குறிப்பிட்டத்தக்கவரான இவரது வேளாண் துறை பங்களிப்பாக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியுள்ளது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுப்பண்ணா ஐயப்பன் மைசூருவில் உள்ள வித்யாரண்யபுராவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் வித்யாரண்யபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மைசூருவை அடுத்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திய போது, அது பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் என தெரியவந்தது. காவிரி கரையோரம் கிடந்த அவரது இரு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீஸார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சேர்ந்த சுப்பண்ணா ஐயப்பனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் மைசூரு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் சுப்பண்ணா ஐயப்பனின் மர்ம மரணம் குறித்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு கடிதம்: இதனிடையே ஐசிஏஆர் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர் வேணுகோபால், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ''விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.
எனவே, நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஐசிஏஆர், நியமன வாரியம் ஆகியவற்றுக்கான பொறுப்பு நியமனங்களில் ஊழல் நடப்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். அதனால் இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும்''என வலியுறுத்தியுள்ளார்.