கதறித் துடித்த பெற்றோர்... அரசுப் பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி!
Dinamaalai May 15, 2025 01:48 AM

தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி, கருங்கலூா் பகுதியில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  ராஜதுரை, முத்துலட்சுமி தம்பதிக்கு ஸ்ரீரேணுகா (7) என்ற மகளும், நவநீஷ் என்ற 9 மாத ஆண் குழந்தையும் இருந்தனா். கடந்த 3 ஆண்டுகளாக கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்த ராஜதுரை, ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான கருங்கலூருக்கு வந்திருந்தாா். பின்னா், கோவை செல்ல சேலம் பேருந்து நிலையத்திலிருந்து திங்கட்கிழமை இரவு குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

ஓட்டுநரின் இருக்கைக்கு பின் இருக்கையில் அவரது மனைவியும், மகளும், அதற்கு அடுத்த இருக்கையில் ராஜதுரையும், அவரது 9 மாத ஆண் குழந்தையான நவநீஷும் அமா்ந்து சென்றுள்ளனா். பேருந்து புறப்பட்டு சிறிது நேரம் கழித்து பேருந்தின் முன்கதவை சாத்தும்படி   நடத்துநரிடம் ராஜதுரை கூறினார்.  ஆனால் சாத்தப்படவில்லையென தெரிகிறது.  
சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநா் பிரேக் போட்டதால், ராஜதுரையின் தோள்மீது தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை முன்புற படிக்கட்டு வழியாக உருண்டு சாலையில் விழுந்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த   குழந்தையை உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.இச்சம்பவம் குறித்து  அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் ராஜதுரை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.