பெற்றோர்களே உஷார்.... காருக்குள் சிக்கி மூச்சு திணறி 5 வயது சிறுமி மரணம்!
Dinamaalai May 15, 2025 02:48 AM

தெலுங்கானா மாவட்டம் ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடால் பகுதியில் 5 வயது சிறுமி தற்செயலாக காருக்குள் சிக்கிக் கொண்டதில், அதிக வெப்பம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று வெளிச்சத்துக்கு வந்தது.

இது குறித்து கட்டால் பகுதி இன்ஸ்பெக்டர் கங்காதர் சந்தா கூறுகையில், “கடந்த  ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தேவாலயத்திற்குச் சென்றிருந்தாள். அதன் பின்னர் வீடு திரும்பிய பிறகு, சிறுமி காரிலேயே இருந்திருக்கிறாள்.

அன்றைய தினம் மாலையில் தான், குழந்தை காணாமல் போனதைக் கவனித்த அவரது தாயார், தனது கணவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்கள் குழந்தையைத் தேடத் தொடங்கியபோது, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் காரின் கதவு சற்றுத் திறந்திருப்பதைக் கண்டார். 

உடனடியாக அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி மயக்கமடைந்து உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டிருந்ததைக் கண்டார். அதற்குள் சிறுமி இறந்துவிட்டார்.

முன்னதாகவே சில விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தராததால் அந்த சிறுமி கோபமாக இருந்ததாக சிறுமியின் தந்தை கூறினார். மேலும் கூறுகையில், "வழக்கமாக, நாங்கள் எங்கள் காரை ஒரு ஷெட்டின் கீழ் நிறுத்துவோம். ஆனால் அன்று, ஷெட் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் அதை வெயிலில் நிறுத்த வேண்டியிருந்தது. எங்கள் மகளால் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. மூச்சுத் திணறல் காரணமாக வாந்தி எடுத்திருக்கிறாள்" என்றார். 

அவர்கள் இறுதியாக சிறுமியைக் கண்டுபிடித்தபோது, வெப்பம் அவளுடைய தோலை கடுமையாக பாதித்திருந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.