நடப்பு ஐபிஎல் சீசனில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒருவாரம் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மே 17 முதல் மீண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆர்.சி.பி. மற்றும் கொல்கத்தா அணிகளிடையிலான முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனால் 17 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
போட்டிகள்: 12, புள்ளிகள்: 17, நிகரரன்ரேட்: 0.482.
எஞ்சியுள்ள போட்டிகள்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,
ஆர்சிபி அணிக்கு அடுத்ததாக லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகளுடன் இடையே ஆட்டங்கள் உள்ளன. இதில் ஒரு போட்டியில் ஆர்சிபி வென்றாலே 19 புள்ளிகளுடன் பிளே ஆஃப் ரேஸ் உறுதி செய்யப்படும். அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு ஒரு புள்ளி எடுத்தாலும் ஆர்சிபிக்கு சாதகமாகவே அமையும்.
அதாவது ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்ல நிகர ரன்ரேட்டை பொருட்டாகக் கருத வேண்டாம் என்றால் இன்னும் 1 வெற்றி அவசியம். சொந்த மைதானத்தில் தொடர்ந்து 2 போட்டிகளை ஆர்சிபி வென்றது அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
அடுத்து வரக்கூடிய 2 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்டதால் அந்த அணிக்கு வெற்றி தோல்வி பாதிக்காது, ஆர்சிபி எளிதாக வென்றுவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்போட்டிகள்: 12, புள்ளிகள்: 17, ரன்ரேட்: 0.389,
எஞ்சியுள்ள போட்டிகள்: டெல்லி, மும்பை,
பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் முழுமையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவில்லை. பஞ்சாப் அணி தற்போது 12 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று ஆர்சிபிக்கு இணையாக இருந்தாலும் நிகர ரன்ரேட் 0.389 என இருப்பதால், 2வது இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் அணிக்கு இன்னும் டெல்லி, மும்பை அணியுடன் இரு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வென்றாலே ப்ளே ஆஃப் உறுதியாகிவிடும். 17 புள்ளிகளை 5 அணிகளும் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு 17 புள்ளிகள் பஞ்சாப்புக்கு பாதுகாப்பானது இல்லை, இன்னும் ஒரு வெற்றி கண்டிப்பாகத் தேவை.
ஒருவேளை அடுத்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் ஏறக்குறைய 2014ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பஞ்சாப் அணி செல்லும்.
குஜராத் டைட்டன்ஸ் நிலை என்ன?குஜராத் டைட்டன்ஸ் இதுவரையில் ஆடிய போட்டிகளின் நிலவரம் வருமாறு
போட்டிகள்: 11, புள்ளிகள் 16, ரன்ரேட்: 0.793,
எஞ்சியுள்ள போட்டிகள்: டெல்லி, லக்னெள, சிஎஸ்கே
குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 16 புள்ளிகளை எட்டியுள்ள குஜராத் வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. குஜராத் அணியைப் பொருத்தவரை அடுத்து வரும் 3 போட்டிகளில் 1 போட்டியில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய நிகர ரன்ரேட் துணை செய்யும்.
அதிலும் சொந்த மைதானத்தில் நடக்கும் 3 ஆட்டங்களில் 1 வெற்றி கிடைத்தாலே போதுமானது. சிஎஸ்கே, லக்னெள அணிகள் தடுமாறி வரும் நிலையில் அந்த அணிகளுக்கு எதிரான வெற்றி குஜராத்தை ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கொண்டு செல்லும்.
தோற்றாலும் ரன் ரேட்டில் வலுவான மும்பை அணிபோட்டிகள்: 12, புள்ளிகள்: 14, ரன்ரேட்: 1.156,
எஞ்சியுள்ள ஆட்டங்கள்: பஞ்சாப், டெல்லி
மும்பை அணி வலுவான ரன்ரேட்டில் 14 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 2 ஆட்டங்களுமே மும்பை அணிக்கு சவாலானதுதான். இதில் இரண்டையுமே வென்றால் மட்டுமே மும்பை அணி கவலையின்றி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
வெற்றிக்கான கட்டாயம் இருக்கும் போதிலும், மற்ற அனைத்து அணிகளையும்விட ரன்ரேட் மும்பை அணிக்குத்தான் வலுவாக இருக்கிறது. பிளே ஆஃப் வாய்ப்பை ரன்ரேட் முடிவு செய்யும் சூழலில் மும்பை அணிக்கு அது சாதகமாக அமையும். இதனால், மும்பை ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.
போட்டிகள்:11, புள்ளிகள்: 13, ரன்ரேட்: 0.362,
மீதமுள்ள ஆட்டங்கள்: பஞ்சாப், குஜராத், மும்பை
டெல்லி அணி தொடக்கத்தில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு 6வது இடத்துக்குச் சரிந்து, கடைசி 4 போட்டிகளில் 3 புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது அந்த அணி 5 வது இடத்தில் உள்ளது.
டெல்லி அணிக்கு அடுத்து வரக்கூடிய குஜராத், பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் சவாலானது. ப்ளே ஆஃப் செல்ல டெல்லி அணிக்கு குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது தேவை.
ஆனாலும் 17 புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா என்று கூற முடியாது. மும்பை, பஞ்சாப், குஜராத் அணிகளை வீழ்த்துவதும் எளிதானது அல்ல. டெல்லி அணிக்கு அடுத்து வரக்கூடிய 3 போட்டிகளிலும் வெல்வதுதான் ப்ளே ஆஃப் செல்வதற்கான எளிய வழி.
போட்டிகள்: 11, புள்ளிகள்:10, ரன்ரேட்: -0.469,
எஞ்சியுள்ள ஆட்டங்கள்: ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ்
லக்னெள அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டையும் உயர்த்த முடியும். 16 புள்ளிகள்கூட ப்ளே ஆஃப் செல்ல முடியுமா என்பதை உறுதி செய்யாது.
ஆர்சிபி, குஜராத் அணிகள் ஏற்கெனவே 16 புள்ளிகளை தொட்டுவிட்ட நிலையில் கடைசி இரு இடங்களுக்குத்தான் லக்னெள போட்டியிட முடியும். எஞ்சிய 3 ஆட்டங்களில் ஆர்சிபி, குஜராத்தை வெல்வது லக்னெளவுக்கு கடினமான பணி. நிகர ரன்ரேட்டும் மோசமாக இருப்பதால், ஒரு தோல்வி அடைந்தாலே லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேற 6 அணிகளே போட்டியில் உள்ளன.
இதையடுத்து ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறிய அணிகளின் எண்ணிக்கை சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ், கொல்கத்தா என 4 அணிகளாக அதிகரித்துள்ளது. அதேநேரம், ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்காக 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் லக்னெள, டெல்லி நிலைமை கம்பி மீது நடப்பது போல் இருக்கிறது. இந்த இரு அணிகளும் ஏதாவது ஒரு தோல்வியைச் சந்தித்தாலும் அந்த அணிகளுக்கு சிக்கல் தான்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.