மதுரையில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மற்றும் காட்டுப்பூச்சி என்ற ஆனந்த் ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது தம்பி (17வயது) தரப்புக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது தங்கபாண்டியின் பைக்கை எரித்தது தொடர்பாக பிரதாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரதாப் காதலித்த பெண் ஒருவரிடம் தங்கபாண்டியின் உறவுக்கார பெண் ஒருவர் பேசி கொண்டிருந்ததை பார்த்த தங்கபாண்டி மற்றும் ஆனந்த் தனது உறவுக்கார பெண்ணை அழைத்து பிரதாப்பின் காதலி சிவப்பிரியாவை நல்ல பிள்ளை கிடையாது எனக்கூறி அசிங்கப்படுத்தும் வகையில் பேசி தங்கப்பாண்டி தனது உறவுக்கார பெண்ணை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பிரதாப்பின் தம்பியிடம் சென்று சிவப்பிரியா நடந்ததை கூறியதால் ஆத்திரமடைந்த பிரதாப்பின் தம்பி தனது நண்பர்களுடன் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டிற்கு தங்கபாண்டியை தேடிசென்று வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தியும், கழுத்தை அறுத்தும் தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கபாண்டியை மீட்டபோது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் தங்கபாண்டியை கொலை செய்த மதுரை செல்லூரை சேர்ந்த பிரதாப்பின் காதலியான சிவப்பிரியா (18), நண்பர்களான விஷால்(எ) சகாயம் (18), அவனீந்திரன் (18) மற்றும் பிரதாப்பின் தம்பி உள்ளிட்ட 3 சிறார்கள் என 6 பேரை கைது செய்தனர். பின்னர் சிவப்பிரியா, சகாயம், அவனீந்திரன் ஆகிய 3 பேரையும் மதுரை மாவட்ட 6ஆவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 சிறார்கள் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.