தமிழகத்தில் ஜூன் 12 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!
Dinamaalai June 08, 2025 03:48 PM

தமிழகத்தில் இன்று ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 12ம் தேதி கீழ்வரும் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுவாகவே மழை நேரங்களில் மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்களைத் தனியே வெளியே அனுப்பாதீங்க.

தற்போது நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வெப்ப நிலை சற்று குறைந்து பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  


வெப்ப நிலையை பொறுத்தவரை இன்று ஜூன் 8ம் தேதி  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38-39″ செல்சியசாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 28-29° செல்சியசாகவும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.