டெல்லியில், காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் கார்களையும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் கார்களையும் பயன்படுத்த அந்த மாநில அரசு கடந்த ஜூலை 1 முதல் தடை விதித்தது.
டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ள வாகனங்களின் பட்டியலில் மொத்தம் 62 லட்சம் வாகனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது.
ஆனால், மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த உத்தரவை விலக்கிக் கொள்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் மக்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய மாட்டோம் எனவும் டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறியுள்ளார்
ஆனால், அதற்கு முன்பே டெல்லியில் தடை செய்யப்பட்ட பழைய கார்களை குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்கான விளம்பரங்கள் அதிகரித்தன.
டெல்லியில் இருந்து விலை மதிப்புள்ள கார்களை தமிழகத்தில் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் சூடு பிடித்துள்ளது. இந்தத் தடை விலக்கப்பட்டாலும் அங்கிருந்து விலை மதிப்புள்ள பழைய கார்களை விற்கும் வர்த்தகம் குறையாது என்கின்றனர் பழைய கார் விற்பனையாளர்கள்.
இவ்வாறு வாங்கப்படும் கார்களை இங்கு மறுபதிவு செய்வது எப்படி, அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதை விளக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், கார் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர், இந்த வாகனங்களை வாங்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியவற்றையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெல்லியில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகாற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 1 முதல் இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் மறுக்கப்பட்டது. பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அண்டை மாநிலங்களில் இருந்தும் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும் டெல்லிக்குள் வராமல் வெளியில் நிறுத்தப்பட்டன.
இதனால் சரக்குப் போக்குவரத்து, பொதுமக்கள் அன்றாட அலுவல்கள் எனப் பலவும் பாதிக்கப்பட்டன. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் காரணமாக, இந்த உத்தரவை நிறுத்தி வைக்கப் போவதாகவும், மக்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய மாட்டோம் எனவும் கூறிய சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்தத் தடை நடவடிக்கையை வாகனங்களின் வயது அடிப்படையில் செய்யாமல், மாசு வெளியீட்டை அதிகமாக மேற்கொள்ளும் வாகனங்கள் அடிப்படையில் செய்வது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.
ஆனால் காற்று தர மேலாண்மை ஆணையமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் பழைய வாகனங்கள் தொடர்பாக அடுத்ததாக என்ன உத்தரவைப் பிறப்பிக்கும் என்பது குறித்து மக்களிடம் ஒரு குழப்பம் காணப்படுகிறது.
ஏனெனில் டெல்லியிலும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள தேசிய தலைநகர மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் (NCR Districts) உள்ள பழைய வாகனங்களுக்கு (ELVs-End of Life Vehicles) கடந்த 2015ஆம் ஆண்டிலேயே தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதனால், பழைய வாகனங்கள் டெல்லியில் தொடர் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இந்தத் தடை விலக்கப்பட்டாலும் மீண்டும் தடை வருமா என்பது குறித்து உறுதியாகத் தெரியாத நிலையில், பழைய வாகனங்களை வைத்துள்ள மக்கள், அவற்றை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் பல லட்சம் வாகனங்களை விற்பதால், வாகனங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கின்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாகனங்களை, குறிப்பாக கார்களை வாங்கி வேறு மாநிலங்களில் விற்பனை செய்வது புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம் என்ற நிலையில், அங்குள்ள மக்கள் குறைந்த விலைகொண்ட கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
ஆனால் டெல்லியில் இருந்து தொலைதுாரத்தில் உள்ள தமிழகத்தில், டெல்லி பதிவெண் கொண்ட விலை மதிப்புள்ள உயர்ரக கார்களுக்கான புதிய சந்தை உருவாகியுள்ளதாக பழைய கார் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ரூ.15 லட்சத்துக்கும் மேலான விலையுடைய, 8–9 இருக்கை கொண்ட பெரிய கார்கள் மற்றும் சொகுசுரக கார்களை டெல்லியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி விற்பதை, கோவையில் சிலர் புதிய தொழிலாகத் தொடங்கியுள்ளனர்.
பிரத்யேக அலுவலகம், கார் நிறுத்தும் இடம், பழைய வாகனங்களை வாங்கி விற்பதற்கான போக்குவரத்துத் துறையின் அங்கீகாரம் எதுவுமின்றி இவர்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
பழைய கார் விற்பனைக்கான முறையான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் திருத்த விதிகள் 55C பிரிவின்படி, 'பரிவாகன்' சேவை போர்ட்டலில், இணைய சேவைகள் வழியாக Dealer Authorization for Old Registered Vehicle என்ற முகப்பில் பதிவு செய்து, 29 A படிவத்தைப் பூர்த்தி செய்து, கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதைப் பரிசீலித்து, டீலருக்கான அங்கீகாரச் சான்றிதழை வழங்குவார்.
அது 29B என்ற படிவத்தில் மின்னணு முறையில் போர்ட்டலில் பதிவேற்றப்படும். அந்தச் சான்றைப் பெறும் டீலருக்கு, துறையினரால் 'யூசர் ஐடி, பாஸ்வேர்டு' வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி, அந்த போர்ட்டலில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வாகன விற்பனை விவரங்களைப் பதிவேற்றலாம். இது தற்போது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இவை எதுவுமின்றி தனிநபர்கள் சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அதிக விலை மதிப்புள்ள டெல்லி வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து வருவது தெரிய வந்துள்ளது.
டெல்லி கார்கள் தற்போது அதிகளவில் விற்கப்படுவதை செயலிகளும் உறுதிப்படுத்துகின்றன. பழைய கார்களை விற்கவும் வாங்கவும் செயல்படும் செயலி ஒன்றில், 16,572 எண்ணிக்கையிலான டெல்லி கார்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு செயலியில் 11,773 கார்களும், வேறோரு செயலியில் 1,344 கார்களும் டெல்லியில் இருந்து விற்பனைக்கு இருப்பதாகக் கூறுகின்றன.
ஆனால் இந்தச் செயலிகளில் குறிப்பிட்டுள்ள தொகையைவிட குறைந்த விலைக்கு தனிநபர்கள் சிலர் வாங்கித் தருவது உண்மை என்கின்றனர் பழைய கார் விற்பனையாளர்கள்.
குறிப்பாக 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய பிஎம்டபிள்யு, பென்ஸ், டொயோட்டா போன்ற விலை மதிப்புள்ள கார்களை மிகக் குறைந்த விலைக்கு டெல்லியில் இருந்து வாங்கி தமிழகத்தில் விற்கும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், ஓய்வு பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், போக்குவரத்து விழிப்புணர்வு எழுத்தாளருமான பாஸ்கரன்.
கோவையில் இரு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள பழைய கார் விற்பனையகத்தின் தலைமை நிர்வாகி கோபி, ''டெல்லியில் இருந்து உயர்ரக கார்களை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதை சிலர் முழுநேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர். அதிலும் இறக்குமதி கார்கள் குறைந்த விலைக்கு டெல்லியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கோவையில் டெல்லி கார்களை குறிப்பாக இன்னோவா போன்ற உயர்ரக கார்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகப் பலரும் யூடியூப் சேனல்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் டெல்லி பதிவெண் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் (NCR Districts) சேர்ந்த பிற மாநில பதிவெண் கொண்ட கார்களை காண்பித்து, அவற்றின் விலையையும், சிறப்புகளையும் விவரிக்கின்றனர்.
அவர்களில் ஒரு விற்பனையாளரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, டெல்லியில் தற்போது தடை விலக்கப்பட்டாலும் அங்கிருந்து உயர்ரக கார்கள் ஏராளமாக இங்கு வருவதாகவும் குறைந்த விலைக்குக் கிடைக்குமென்றும் தெரிவித்தார். அதேபோன்று டெல்லியில் உள்ள ஒரு பழைய கார் விற்பனையாளரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, 80 ஆயிரம் கி.மீ. மட்டுமே ஓடியுள்ள இன்னோவா கார், 7 லட்ச ரூபாய்க்கு இருப்பதாகத் தகவல் கூறினார்.
டெல்லியில் இருந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட, அதிக விலையும், அதிக இருக்கையும் கொண்ட ஒரு குறிப்பிட்ட ரக டீசல் கார்களே அதிகளவில் இங்கு கொண்டு வரப்படுவதாகக் கூறும் அரசின் அங்கீகாரம் பெற்ற பழைய கார் விற்பனையாளர் கவாஸ்கர், "இந்த வாகனங்களை வாங்கி இங்கே கொண்டு வருவதற்கு நிறைய செலவிட வேண்டியிருக்கும்" என்றார்.
அதேபோன்று 100 கார்கள் அங்கிருந்து கொண்டு வரப்பட்டால் அவற்றில் 10க்கும் குறைவான வாகனங்களே பயன்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாகக் கூறுகிறார் கோபி.
''உதாரணத்துக்கு ஒரு லட்சம் கி.மீ. ஓடியுள்ள இன்னோவா கார், அங்கு தற்போது 4 லட்ச ரூபாய்க்கும்கூட கிடைக்கிறது. ஆனால் அதை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு வந்தாலும், கன்டெய்னர் மூலமாகக் கொண்டு வந்தாலும் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.
அதை இங்கு மறுபதிவு செய்ய, வாகனத்தின் வயது மற்றும் புதிதாக விற்பனை செய்தபோதிருந்த விலையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஆயுட்கால வரியாகச் செலுத்த வேண்டும். இதுபோக ஆர்டிஓ செலவும் இருக்கும். இவையனைத்தையும் சேர்த்து 2 லட்ச ரூபாய் வரை வாகனத்திற்குக் கூடுதல் செலவாகும்'' என்று விளக்கினார் பழைய கார் விற்பனையகத்தின் நிர்வாகி கோபி.
பொதுவாக டெல்லியில் இருந்து வாங்கப்படும் கார்களின் ஓட்டம் (கி.மீ.) குறைவாகவே இருக்குமென்று கூறும் பழைய கார் விற்பனையாளர்கள், அதனால் அவற்றின் உள்பாகங்களில் பெரிய அளவில் பழுது இருக்காது என்கின்றனர்.
அதேநேரத்தில் வெளிப்புறத்தில் ஏராளமான கீறல்கள், பள்ளங்கள் (Scratch & Dent) இருக்கும் என்றும், அதன் இயல்பான நிறத்திலும் வாகனம் இருக்காது என்றும் கூறுகின்றனர். இதனால் காரின் வெளிப்புறத்தைச் சரிசெய்து, பெயின்ட் அடிக்கும் செலவும் தனியாக இருக்கும் எனவும் விவரித்தனர்.
டெல்லி உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்படும் கார்களை மறுபதிவு (Re-registration) செய்ய வேண்டிய நடைமுறைகளைத் தெரிந்துகொள்ள இணை போக்குவரத்து ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
ஆயுட்கால வரியைப் பொறுத்தவரை, ரூ.5 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள கார், ரூ.5 லட்சம்–ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள கார், ரூ.10 லட்சம்–ரூ.20 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள கார், ரூ.20 லட்சத்தும் அதிகமான மதிப்புள்ள கார் என்று 4 விதமாக பிரிக்கப்பட்டு, அவற்றின் வயது அடிப்படையில் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி, குறைந்தபட்சம் 8 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சமாக 18.75 சதவிகிதம் வரை விதிக்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தைவிட, கேரளா மாநிலத்தில் தான் டெல்லி வாகனங்களை வாங்கும் போக்கு அதிகமுள்ளதாகக் கூறுகிறார் பழைய கார் விற்பனையகத்தின் நிர்வாகி கோபி.
"வெளிநாடு வாழ் மக்கள் அங்கு அதிகமாக இருப்பதால் அவர்கள் விடுமுறைக்கு வரும் 3 மாதங்களுக்கு கேரளாவில் பயன்படுத்த டெல்லியில் இருந்து உயர்ரக கார்களை வாங்கிப் பயன்படுத்தி விட்டு, திரும்பும்போது மீண்டும் விற்றுவிடுவதாக அவர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் கர்நாடகாவை போன்று, கேரளாவில் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் மீது போக்குவரத்துத் துறையின் கெடுபிடி அதிகளவில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்" என்கிறார் அவர்.
அதோடு, ''ஒரு வாகனத்திற்கு மறு பதிவெண் வந்துவிட்டால் வாகனத்தின் மறு விற்பனை மதிப்பும் சட்டென்று இறங்கிவிடும். வாகனம் புதிதாக விற்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டால், மீண்டும் அதைப் புதுப்பிக்கும் செலவும் (RC Renewal) கூடுதலாக ஏற்படும். இவற்றைக் கணக்கிட்டால் வெளிமாநிலங்களில் வாகனம் வாங்குவதும் இங்கே நல்ல நிலையில் உள்ள தமிழக பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தை வாங்கும் செலவும் ஏறக்குறைய ஒன்றாகிவிடும்'' என்றார் கோபி.
வெளிமாநில வாகனங்களை வாங்கும்போது வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்கிறார் கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன்.
முதலில் வாகனத்தின் வயதைக் கணக்கிட்டு, அந்த வாகனத்தைத் தடை செய்யும் போக்கு தவறானது எனக் கூறும் அவர், எப்போதுமே வாகனத்தின் பராமரிப்பு மற்றும் இயக்க நிலையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
''உதாரணமாக 14 ஆண்டுள் பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம் வெறும் 6 ஆயிரம் கி.மீ.தான் ஓடியிருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் ஒருவர் தனது வாகனத்தை ஒரு லட்சம் கி.மீ. ஓட்டியுள்ளார். அதேபோல காற்று மாசு அளவீட்டிற்கான சான்று வைத்துள்ள ஒரு வாகனத்தில் புகை அதிகமாக வரும். சான்று இல்லாத வாகனத்தில் புகையே இருக்காது. இப்படி காகிதங்களை (RC Book, Pollution Certificate) வைத்து ஒரு வாகனத்தைத் தடை செய்யவும் கூடாது. அதை வைத்து வாகனத்தை மதிப்பிடவும் கூடாது'' என்கிறார் கதிர்மதியோன்.
மேலும் தொடர்ந்த அவர், ''டெல்லி போன்ற பெருநகரங்களில் வாங்கப்படும் வாகனம் ஏதாவது குற்றச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த விவரங்கள் 'இ–வாகன்' தளத்தில் பதிவேற்றப்படுவது இல்லை. அபராதம் மற்றும் வரி பாக்கி மட்டுமே குறிப்பிடப்படுவதால் இதைக் கவனிப்பதும் முக்கியம்'' என்றார்.
டெல்லியில் விற்கப்படும் பழைய கார்களை இங்கே கொண்டு வரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் அழகரசு, ''டெல்லியில் பல வாகனங்களின் ஆர்.சி.யை அந்த மாநில போக்குவரத்துத் துறை இடைநீக்கம் (Suspend) செய்து விடுவதாகவும் தகவல் உள்ளது.
அதனால் ஆர்.சி. புத்தகம் பயன்பாட்டில் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். அங்கே தடையின்மைச் சான்றிதழ் தரப்பட்டால் மட்டுமே இங்கு மறுபதிவெண் கேட்டு விண்ணப்பிக்க முடியும்'' என்று விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு