“மோசடி எதுவும் நடக்கவில்லை”… அமைச்சர் கே.என் நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
SeithiSolai Tamil July 07, 2025 05:48 PM

அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் 22 கோடியே 48 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக இருக்கக்கூடிய நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன் காரணமாக அமைச்சர் நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரவிச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் எந்த மோசடியும் நடைபெறவில்லை என்றும் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கூறி அமைச்சர் நேருவின் சகோதரருக்கு எதிரான இந்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழக தீர்வு மையத்துக்கு தலா ரூபாய் 15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.