உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரங்களில் வானத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒளிரும் ட்ரோன் பறக்கிறது என்ற வதந்தி பல்வேறு பகுதிகளில் பரவி வந்த நிலையில், மக்களிடையே பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது.
இந்தச் சூழலில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிவந்தது. ட்ரோன் என மக்கள் நினைத்ததெல்லாம், உண்மையில் புறாக்கள் என்பதும், அவற்றின் கால்கள் மற்றும் கழுத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறக் விளக்குகள்(LED lights) கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த செயலுக்குப் பின்னால் இரு இளைஞர்கள் இருப்பது கண்டறியப்பட்டு, ஷோயிப் மற்றும் ஷாகிப் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும், இரவின் இருட்டில் புறாக்களை வானத்தில் பறக்க விட்டனர், அந்த புறாக்களின் உடல்களில் ஒளிரும் விளக்குகளை கட்டி வைத்ததால், மக்கள் அதை ட்ரோன்களாக எண்ணி பீதி அடைந்தனர்.
போலீசார் சந்தேகத்துடன் வானத்தில் பறக்கும் ஒளியைப் பின்தொடர்ந்த போது, அது காடுகள் நோக்கி பறந்ததை கண்டனர். பின்னர் அந்த இடத்தில் புறா ஆர்வலர்கள் இருப்பதும், அவர்கள் இந்த இரு இளைஞர்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இருவரும் சமூகத்தில் பயமும் குழப்பமும் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு இந்த செயலை செய்திருப்பது உறுதியானது. புறாக்களின் உதவியுடன் ட்ரோன் போன்று காட்சி அளிக்க வைக்கப்பட்டதால், இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு வகையான சதித் திட்டமாக கருதப்படுகிறது.
போலீசார் இப்போது இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு புறாக்களும், சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம், வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவுகிற தகவல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய திட்டமிடல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவும், போலீசாரின் குற்றவியல் தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் வெளிக்கொணர்கிறது.