இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி..!
Seithipunal Tamil July 31, 2025 11:48 AM

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ள ட்ரம்ப், இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 01-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். உலக நாடுகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்து இருந்தார். 

அதன் பின்னர், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், குறித்த வரிகளில்10% ஆகக் குறைத்து தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். மேலும், இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நாம் இந்தியாவுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தியா எப்போதும் தங்கள் இராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் ரஷ்யா உக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவராகவும் உள்ளது வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தியா ஆகஸ்ட் முதல் 25% வரியை செலுத்தும், மேலே உள்ளவற்றுக்கு அபராதம் செலுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.