திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் பாண்டியன் என்பவர் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனது உறவினர் தீனதயாளன் அவரது மனைவி சித்ராவுடன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள இண்டஸ் இண்ட் வங்கியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மூன்று வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை அவர்களது அனுமதி இல்லாமல் செக் மற்றும் வவுச்சர்களில் வங்கி ஊழியர்கள் போலியாக கையெழுத்து போட்டு சுமார் 1.43 கோடி பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். வங்கி ஊழியர்கள் நிரந்தர வைப்புத் தொகையை நிறுத்தி வைத்து போலியாக கையெழுத்து போட்டு பணத்தை மோசடி செய்தது போலீசார் நடத்தி விசாரணையில் தெரியவந்தது.
இதனால் வங்கியின் துணை மேலாளர் வேணுகோபால், காசாளர் குலோத்துங்கன், தனசேகரன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபாணியில் மூன்று பேரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 8 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது