பாலியா (உத்தரபிரதேசம்):உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் குடும்ப தகராறு திடீர் வன்முறையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியா மாவட்டம் மகாவீர் அஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (28) மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த இரவு, வீட்டில் கோதுமை மாவு இல்லாததால், தேவி வேறு உணவு சமைத்திருந்தார்.
இந்நிலையில் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சஞ்சய், சப்பாத்தி செய்து தருமாறு தனது மனைவியிடம் கேட்டார். ஆனால், மாவு இல்லாத காரணத்தால் தேவி மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த தேவி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கணவனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. கத்தியால் தாக்கப்பட்ட சஞ்சய், கத்தலிட்டு கீழே விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது சஞ்சய் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.