திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தி.மு.க. தலைவரும் அமைச்சருமான கே.என்.நேரு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் மதுரை மாநாட்டு உரை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மதுரை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய நேரு, "நேற்று அரசியலுக்கு வந்த ஒருவர், ஒரு மாநிலத்தின் முதல்வர், ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நாகரிகமின்றி குறிப்பிடுவது அவமரியாதைக்குரியது" என்று கண்டனம் தெரிவித்தார்.
"சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு, அந்த ஆயிரம் ரூபாய் பெண்களின் வாழ்க்கையில் எப்படி பயன்படுகிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான், இந்தத் திட்டத்தை அவர் விமர்சித்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது பெண்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்" என்றும் கூறினார்.
மக்கள் போற்றும் ஒரு ஆட்சியை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும், அதேசமயம் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் மென்மையாக விமர்சித்து சென்றதாகவும் நேரு குற்றம் சாட்டினார். இதன் மூலம் விஜய்யின் அரசியல் தரம் மக்களுக்கே தெரியும் என்றும், இதற்கு தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva