தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு, வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களிடம் இருந்து தேவையற்ற ஆவணங்கள் கேட்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில், இனி முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம்–2-ஐ நுகர்வோரிடமிருந்து பெற வேண்டிய அவசியமில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் விரைவாக பெயர் மாற்றம் செய்யும் வசதி கிடைக்கிறது.
அதே நேரத்தில், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது அல்லது நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால், வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் கால சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.