சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள தனது இல்லத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். “முதல்வர் வெளிநாடு டூர் சென்றதற்குப் பிறகு, 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் எனக்குத் தெரிந்தபடி, அந்த வேலை வாய்ப்புகளில் 89% ஏற்கனவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் தொடர்புடையவையே” என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “தற்போது தமிழகத்தில் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று உடனடியாக தீர்வு தேவைப்படும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல், வெளிநாட்டுக்குச் சென்று ‘விளம்பர பயணத்தில்’ ஈடுபடுவது வீணாகும்” என தெரிவித்தார்.
சசிகலாவின் இந்த விமர்சனம், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் பயன்கள் குறித்து புதிய விவாதங்களும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.