Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு
Vikatan September 18, 2025 04:48 AM

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை.

இதனால் மாநில அரசுக்கு இந்தத் திட்டம் மூலம் கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் மும்பையில் கனமழை பெய்தபோது, மற்ற ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் மோனோ ரயிலில் பயணிகள் கூட்டம் திடீரென அதிகரித்தது.

இதன் காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்றுவிட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மோனோ ரயிலின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பும் இதேபோல் மோனோ ரயில் பாதி வழியில் நின்றது. இதனால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணவும், மோனோ ரயில் சேவையை மேம்படுத்தவும் மாநில அரசு தற்காலிகமாக மோனோ ரயில் சேவையை நிறுத்த தீர்மானித்துள்ளது.

புதிய சிக்னல் முறையை அமல்படுத்தவும், பழையவற்றை மாற்றியமைக்கவும் வசதியாக மோனோ ரயில் சேவை வரும் 20ஆம் தேதியிலிருந்து காலவரையின்றி நிறுத்தப்படுகிறது.

புதிதாக 10 மோனோ ரயில்கள் வாங்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 ரயில்கள் டெலிவரி செய்யப்பட்டுவிட்டன.

மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்ட காலத்தில் புதிய மோனோ ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும், ஏற்கெனவே இருக்கும் ரயில்களை பழுதுபார்க்கவும், ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானம் ரூ.13.64 கோடி; செலவு ரூ.542 கோடி! மூடப்படும் இந்தியாவின் முதல் மோனோ ரயில்!

இது குறித்து மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில்,

''மோனோ ரயில் சேவையை வலுப்படுத்த இந்த இடைவெளி தேவையாக இருக்கிறது.

மீண்டும் வலுவான முறையில் மோனோ ரயில் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

இரண்டு மாதம் கழித்து மோனோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.

மோனோ ரயிலை இயக்குவதன் மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.529 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மோனோ ரயில் தொடங்கப்பட்டபோது அதில் தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது வெறும் 18 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். மோனோ ரயில் போக்குவரத்து 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாக நிறுத்தப்படுகிறது.

மும்பை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்; அந்தரத்தில் உயிருக்கு போராடிய பயணிகள்; கிரேன் மூலம் மீட்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.