அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்து வருகிறார்கள்; திமுகவில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்திக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரை அண்ணா நகரில், பாஜக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.ஜி.எஸ்.டி வரி குறைப்பை தீபாவளி பரிசு எனக் கூறினார்
ஜி.எஸ்.டி குறைப்பை பற்றி பேசிய அவர்,1947 முதல் இன்றுவரை உயர்த்திய வரியை குறைத்ததாக வரலாற்றில் இல்லை.தற்போது 18% இருந்த வரி 5% ஆக குறைக்கப்பட்டதால், 90% தொழில்துறையினர் பயன் பெறுவார்கள்.இதை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளனர் எனக் கூறினார்.
ஆனால், தமிழக முதலமைச்சர் இந்த குறைப்பை வரவேற்க மறுக்கிறார். “மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம், கால்ப்பட்டால் குத்தம் போல தான்” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.2026ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.2029 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும் கூறினார்.
மேலும், டிடிவி தினகரன் குறித்து, “முதலில், அமித் ஷா யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெறச் செய்வேன் என்றார்; இப்போது வேட்பாளர் மாற்றம் வேண்டும் என்கிறார். இனி அவர் என்ன கூறுவார் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்” என்றார்.
“அதிமுகவில் ஜனநாயகம் உள்ளது, அதனால் தலைவர்கள் அமித் ஷாவை சந்திக்கிறார்கள். ஆனால் திமுகவில் ஜனநாயகம் இல்லை. அங்கே கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் மட்டுமே பதவியை வகிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஜனநாயகம் எங்கு இருக்கும்?” என்று கடுமையாக விமர்சித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய அவர்,இது அரசு செலவுகளை குறைக்கவே கொண்டுவரப்பட்ட திட்டம்.5 ஆண்டுகளில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களால் அரசு செலவுகள் அதிகரிக்கின்றன.முன்னாள் முதல்வர் கலைஞர்கூட தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்துள்ளார் எனக் கூறினார்.
இதை ஒட்டி, “விஜய்க்கு அரசியல் பற்றிய புரிதல் இருந்தால் இதை உணர்ந்திருப்பார். அதனால் அவர் நெஞ்சுக்கு நீதி படித்து பாருங்கள்” என்று நயினார் நாகேந்திரன் சாடினார்.