களத்தில் இறங்கும் நயினார் நாகேந்திரன்.. அக். முதல் வாரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம்..
TV9 Tamil News September 18, 2025 04:48 AM

சென்னை, செப்டம்பர் 16, 2025: தமிழக பாஜகவை பலப்படுத்தும் வகையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2025 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் நான்கு இடங்களை கைப்பற்றி சட்டப்பேரவையில் நுழைந்தது.

அதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அப்போது இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: ஆயுத பூஜை, தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நாளை முன்பதிவு தொடக்கம்..

அதிமுக பாஜக கூட்டணி:

அதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை என்பது வெளிப்படையானது. அதன் பின்னர், இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பார்களா என்ற பேச்சுக்கள் எழுந்தன. 2025 ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் வருகை தந்தபோது, அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து சந்திக்க உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: ஏடிஎம்-ல் பணம் சிக்கிக்கொண்டதா? பாதுகாப்பாக திரும்ப பெறுவது எப்படி?

அதிமுக தரப்பில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் பாஜக தரப்பிலும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்களும் மையக்குழுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்:

இது போன்ற சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவிருக்கும் 2025 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு மூன்று தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், தொகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளையும் சந்தித்து அந்த தொகுதியின் நிலைமை எப்படி உள்ளது, எந்தெந்த தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது, தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு விஷயங்களை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.