16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை - போக்ஸோவில் வாலிபர் கைது.!!
Seithipunal Tamil September 18, 2025 05:48 AM

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், 8-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இதனால், அவரது பெற்றோர் சிறுமியை திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது சிறுமிக்கு அங்கு பணிபுரியும் திருச்சியை சேர்ந்த 21 வயது வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து நெருங்கி பழகி வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமானார்.

இந்த நிலையில் சொந்த ஊரான குன்னூர் வந்த சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது தந்தை சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக உள்ளதாகவும், தற்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டதில், பெண் குழந்தை பிறந்தது.

இந்த சம்பவம் குறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் படி போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.