தஞ்சாவூர் மாவட்டத்தின் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் குமார் என்பவர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது விவசாய பாசனத்திற்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில் தஞ்சையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பெரும்பாலும் நீச்சல் தெரியாத நபர்கள் தன்னுடைய கவனக்குறைவு காரணமாக ஆழமான இடத்திற்கு சென்று நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் திடீர் மழை மற்றும் அணை திறப்பு காரணமாக நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அதில் மூழ்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதே சமயம் நீச்சல் தெரிந்திருந்தாலும் கூட வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. இதுதவிர நீர் நிலைகளில் செல்பி எடுத்தல், நண்பர்களுடன் விளையாடுதல், செல்லப்பிராணிகளை குளிக்க வைத்தல் உள்ளிட்ட செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும். ஆகவே மக்கள் தங்கள் உயிரின் அவசியம் உணர்ந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அந்த செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.