சென்னை பெரு நகரில் மாநகர பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகிய பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதில், ஒரு சேவையை பயன்படுத்தும் நபர், அடுத்த சேவைக்கு மாறும் போது சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, வெவ்வேறு வழிகளில் கட்டணம் செலுத்தி, பயணச்சீட்டு பெறுவதில், பயணியர் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
இதற்கு தீர்வாக க்யூ.ஆர்., குறியீட்டை அடிப்படையாக வைத்து, ஒரே டிக்கெட்டில் அடுத்தடுத்த சேவைகளை பயன்படுத்தும் திட்டம், 2023ல் அறிவிக்கப்பட்டது.இதற்காக 'கும்டா' எனும் போக்குவரத்து குழுமம், தனியார் நிறுவனம் மூலம் புதிய மென்பொருளை தயாரித்தது. இதன் அடிப்படையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயணியர் வெளியில் செல்லும்போது எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை குறிப்பிட்டு கட்டணம் செலுத்தினால், அதற்கு, க்யூ.ஆர்., குறியீட்டு டிக்கெட் மொபைல் போனில் கிடைக்கும்.
இந்த குறியீட்டை காட்டி, அந்தந்த பொது போக்குவரத்து சேவைகளில் மக்கள் பயணிக்கலாம். ஒவ்வொரு சேவையிலும் தனித்தனியாக டிக்கெட் எடுக்கும் வேலை இருக்காது. இந்த புதிய செயலியின் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
'சென்னை ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி குறித்த புதிர் கேள்விகள், தற்போது மாநகர பேருந்துகளில் பயணியரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், இந்த புதிய செயலி, 22ம் தேதி அறிமுகப்படுத்தப் பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய வசதியை துவக்கி வைக்க உள்ளதாக 'கும்டா' அதிகாரிகள் தெரிவித்தனர்.