அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், 2017 ஆம் ஆண்டு முதல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்களை விற்று வந்தது. இந்நிலையில் , இந்தப் பாட்டில்களைப் பயன்படுத்தி வந்த நுகர்வோரிடமிருந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால் போன்றவற்றை அடைத்து வைத்து நீண்ட நேரம் கழித்து , திறக்கும்போது மூடி அதிக அழுத்தத்துடன் வெடித்து வெளியேறுவதாக சொல்லப்பட்டது. இதனால், மூன்று நபர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவருக்கு மூடி கண்ணில் பட்டு நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையை அமெரிக்காவின் நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் (CPSC) ஆராய்ந்தது. அறிக்கையின்படி, பாட்டிலின் மூடி வலுவாக வெளியேறுவதால் கடுமையான காயங்கள் ஏற்படலாம் என்பதை உறுதிப்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் வால்மார்ட்டிடம் புகார் அளித்ததோடு, ஆணையமும் நிறுவனத்தை எச்சரித்தது. இதன் விளைவாக, இந்தப் பாட்டில்களை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, அவற்றை வால்மார்ட் கடைகளுக்கு திரும்ப அனுப்பி முழு தொகையை திரும்பப் பெறுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டது. இது பாதுகாப்புக்காக மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
வால்மார்ட் நிறுவனம் இந்த ரீகால் (recall) அறிவிப்பை ஏற்றுக்கொண்டு, சுமார் 8.5 லட்சம் பாட்டில்களைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது. நிறுவனத்தின் அறிக்கையில், வாடிக்கையாளர்களின் உடல் நலனும் பாதுகாப்பும் எப்போதும் முதல் முன்னுரிமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாட்டில்களை கடைகளுக்கு கொண்டு சென்றால் முழு ரூபாய் திரும்பக் கொடுக்கப்படும் எனவும், விற்பனையை உடனடியாக நிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.