தவெக: "எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை" - அப்பாவு
Vikatan September 24, 2025 05:48 AM

நெல்லையில் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் மொழி தமிழ். தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. எனவே மூன்றாவதாக இந்தி தேவையில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதேபோல மும்மொழிக் கொள்கையும் தேவையில்லை. அதற்காக மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் உள்ளது.

அப்பாவு

தமிழகத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக நிதியைத் தர மறுக்கின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டில் புதிய கட்சிகளைத் தொடங்கச் சொல்லியுள்ளனர். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைக்கின்றனர். நான் நடிகர் விஜய்யைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவரை கட்சி தொடங்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். அவருக்குக் கேட்காமலேயே ஒய் பிரிவு பாதுகாப்பினைக் கொடுத்துள்ளனர். தனி விமானம் கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

"தவெக-வுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேச வேண்டாம்" - நயினார் நாகேந்திரன் சொல்லும் காரணம் என்ன?

அந்த அகந்தையில் சினிமாவில் பேசுவதைப் போல் பேசுகிறார். 'நான் பிரசாரத்திற்கு வந்தால் கண்டிஷன்கள் போடுகின்றனர். பிரதமரோ அமித்ஷாவோ வந்தால் இப்படி கண்டிஷன் போடுவார்களா? சி.எம் சாரைக் கேட்டுப்பாருங்கள்' என்கிறார்.

விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதல்வரோ வந்தால் அவர்களுக்கான ப்ரோட்டாகால் என்ன? விஜய்யின் ப்ரோட்டோகால் என்ன? என்பதை அவர் தெரிந்து பேச வேண்டும்.

அப்பாவு

கண்ணியக்குறைவான வார்த்தைகளை அவர் தவிர்க்க வேண்டும். யாரோ எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் விஜய் குறிப்பிடுவதைப் போல அவரைத் தவிர அரசியல் கட்சி நடத்தும் யாருக்கும் பயம் இல்லை. தலைவா படப்பிடிப்புக்காக கொடநாட்டில் 3 நாட்கள் காத்துக்கிடந்து காலில் விழுந்தது யார் என்பது தெரியும்” என்றார்.

`நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.