நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் தொடங்கியுள்ளார். கடந்த 13 ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கிய அவர், ஒவ்வோரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நாமக்கல்லில் விஜய் வரும் 27ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள மதுரைவீரன் கோவில் அருகே இடம் தேர்வு செய்திருந்த நிலையில் அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பொய்யேரிகரை சாலை, மதுரைவீரன் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம் நாமக்கல்லில் பதி நகர் பழைய ஆர்டிஓ அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.