கோவையில் சிலீவ்லெஸ் சுடிதார் அணிந்து பூமார்கெட் சென்ற சட்டக் கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்து, தாக்க முயன்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட மாணவி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கோவை வீரபாண்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜனனி (20). இவர் ஆந்திராவில் உள்ள கல்லூரியில், LLB சட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி கடந்த 21 ஆம் தேதி திசைகள் என்ற அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த ஓவிய பயிற்சிக்காக "பூ மார்க்கெட்" சென்றார். அப்போது அங்கு சென்ற பணிகளை முடித்துவிட்டு கிளம்பும்போது, பூ மார்க்கெட்டில் இருந்த முத்துராமன் என்ற வியாபாரி ஜனனியின் உடை குறித்து விமர்சித்ததாக தெரிகிறது. மேலும் இம்மாதிரியான உடைகளை அணிந்து வரக்கூடாது, ஒருவேளை வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என கூறியுள்ளார். ஜனனியின் ஸ்லீவ்லெஸ் உடை குறித்து விமர்சித்த வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அங்கிருந்த சிலர் வியாபாரிக்கு ஆதரவாக ஜனனியை அவதூறாக பேசி தாக்க முற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் உடைகுறித்து விமர்சித்ததோடு அவதூறாக பேசி தாக்க முற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவி ஜனனி, வழக்கறிஞர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து பேசிய சட்டக் கல்லூரி மாணவி ஜனனி கூறும் போது. கடந்த 21 ஆம் தேதி ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து பூ மார்க்கெட் சென்றேன். அப்போது அங்கிருந்த வியாபாரி ஒருவர் இம்மாதிரியான உடை அணிந்து உள்ளே வரக்கூடாது. இது தவறு செய்ய தூண்டும் என பேசி விமர்சித்தார். அப்போது அவர் போட்டிருந்த உள்ளாடை (பனியன்) வெளியே தெரிகிறது, நீங்களும் ஷால் அணிந்து வாருங்கள் என கூறினேன். மேலும் பூ மார்க்கெட் உள்ளே வர ஆடை கட்டுப்பாடுகள் உள்ளதா? எந்த மாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும்? என கேட்டேன். தொடர்ந்து அங்கிருந்த மேலும் சிலர் வந்து என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செல்போனை பறிக்க முயன்றனர். அதேபோல் என்னையும், என்னுடன் வந்த நண்பரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.