வானிலை நிலவரம், அக்டோபர் 25, 2025: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று, அதாவது 25 அக்டோபர் 2025 அன்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதனைத் தொடர்ந்து நாளை, அதாவது 26 அக்டோபர் 2025 அன்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலுக்கு “மோன்தா” என பெயரிடப்படும். இந்த புயல் தெற்கு ஆந்திரா கடற்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலின் காரணமாக, தமிழகத்தில் வரவிருக்கும் சில நாட்களில் கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 25 அக்டோபர் 2025 தேதியான இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், 26 அக்டோபர் 2025 அன்று விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், 27 அக்டோபர் 2025 அன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..
சென்னை மற்றும் புறநகரில் மழைக்கு வாய்ப்பா?சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், வங்கக் கடலில் உருவாகக்கூடிய இந்த புயலின் காரணமாக மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆந்திராவில் கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னைக்கு என்ன நிலை? பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வராமல் ஆந்திராவை நோக்கி சென்றால் மழையின் அளவு கணிசமாக குறையும்; ஆனால் தமிழக கடற்கரையோரம் ஒட்டி சென்றால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் எந்த பாதையில் நகர்ந்து செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தோராயமாக 26 அக்டோபர் 2025 தேதியான நாளை, இந்த புயலின் பாதை நமக்கு தெளிவாக தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.