வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் ‘மோந்தா’ எனும் பெயரில் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் தாக்கம் காரணமாக ஒடிஸா மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒடிஸாவின் அனைத்து 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடலில் சென்றிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 28ஆம் தேதி ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் எனவும், அதன்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில், சில இடங்களில் அதிகபட்சம் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் மல்காங்கிரி, கோரபுட், ரயாகடா, கஜபதி, கஞ்சம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் அலையொலி காரணமாக கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், மக்களை தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.