அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில், வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பான வாக்குவாதம் துயர சம்பவமாக மாறியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) தனது கணவர் அரவிந்த் சிங்கின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தம்பதியினர் வசித்து வந்தனர். அக்டோபர் 12 அன்று இருவருக்கும் வீட்டு வேலை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் போது கோபத்தின் உச்சத்தில் இருந்த சந்திரபிரபா, கையில் இருந்த கத்தியால் கணவரின் கழுத்தில் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காயமடைந்த அரவிந்த் சிங் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சந்திரபிரபா “காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் வீட்டை சுத்தம் செய்ய உதவுமாறு கேட்டேன். அதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தவறுதலாக கத்தியால் காயம் ஏற்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் அரவிந்த் சிங், “என் மனைவி நோக்கத்துடன் குத்தினாள்” என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் சந்திரபிரபாவை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவத்திற்குப் பிறகு சந்திரபிரபா பணியாற்றிய பள்ளி நிர்வாகம் அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.