மோந்தா புயல் எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு ஏனாமில் 3 நாள்கள் விடுமுறை!
Seithipunal Tamil October 27, 2025 12:48 PM


மோந்தா புயல் எச்சரிக்கையின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது ஆந்திராவை ஒட்டிய ஏனாம் பகுதிகளில் கனமழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆந்திர மாநிலத்திலும் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சனிக்கிழமையன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, புயல் சின்னம் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 27ஆம் தேதி ‘மோந்தா’ என்ற பெயரில் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோந்தா புயல் பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி தீவிர புயலாக மாறி, ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடா அருகே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.