சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இந்திய நாட்டவரான எலிப் சிவா நாகு (34), ஆண் பார்வையாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றத்திற்காக அவருக்கு ஒரு வருடம் இரண்டு மாத சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்தச் சம்பவம் ஜூன் மாதம் நடந்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர் தனது தாத்தாவைப் பார்ப்பதற்காக வடக்கு பிரிட்ஜ் சாலையில் உள்ள அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
சம்பவம் நடந்த அன்று இரவு 7.30 மணியளவில், பாதிக்கப்பட்டவர் நோயாளி கழிப்பறைக்குள் சென்றபோது, அங்கு எலிப் சிவா நாகு இருந்துள்ளார். ‘கிருமி நீக்கம்’ செய்ய விரும்புவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவரின் கையில் சோப்பைத் தடவிய எலிப், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று துணை அரசு வழக்கறிஞர் யூஜின் புவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எலிப்பின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர், அசையாமல் இருந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் தனது தாத்தாவின் படுக்கைக்குத் திரும்பியுள்ளார்.
சம்பவம் குறித்து ஜூன் 21-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு எலிப் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றத்திற்குப் பிறகு அவர் தனது செவிலியர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
எலிப்பின் இந்தக் குற்றம், பாதிக்கப்பட்டவருக்கு முந்தைய துயரச் சம்பவங்களின் நினைவுகளை மீண்டும் ஏற்படுத்தியது என்று நீதிமன்றம் விசாரித்ததில் தெரிய வந்தது. இதனையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட எலிப்பிற்குச் சிறை மற்றும் பிரம்படி விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவரின் வயது உள்ளிட்ட விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ளன..
ராஃபிள்ஸ் மருத்துவமனை, “நோயாளிகளின் மற்றும் வருகையாளர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை” எனக் கூறி, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு, சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள் யாருக்கும் விதிவிலக்கின்றி அமல்படுத்தப்படுகின்றன என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.