அக்டோபர் 31, மாதத்தின் இறுதி நாள். பலருக்கு இது சம்பள நாள். ஆனால், அமெரிக்க அரசாங்கத்திற்காக வேலை செய்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் பணம் இல்லாமல் தவிக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் ‘ஷட் டவுன்’ காரணமாக, சொந்த ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு முடக்கம் இப்போது ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் விளைவாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க இராணுவ வீரர்கள், ஆயிரக்கணக்கான விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சில சட்டம் இயற்றுபவர்களுக்கும் கூட சம்பளம் கிடைக்கவில்லை. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சம்பளம் வழங்க, அரசு திண்டாடுகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம், முன்னணி பணியில் உள்ள வீரர்களின் ஊதியத்திற்காக, கிடைத்த $130 மில்லியன் நன்கொடையை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை, ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் சுமார் $100 என பிரித்து கொடுக்கப்படுகிறது. $30 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட ஒரு நாடு, தனது வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க தனிநபர் நன்கொடையை நம்பியிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், இது நெறிமுறையற்றது என்றும் விமர்சகர்கள் கடுமையாக சாடுகின்றனர்.
அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு இது அரசியல் அல்ல; இது வாடகை, பில்கள் மற்றும் அடிப்படை செலவுகள் குறித்த பிரச்சினை. பாதுகாப்பு துறையின் மாதாந்திர சம்பள செலவு மட்டும் சுமார் $6.5 பில்லியன் இருக்கும்போது, $130 மில்லியன் என்பது மிக சிறிய தொகையே.
அரசு முடக்கத்தின் வலி, அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஊழியர்கள் மத்தியிலும் பரவி வருகிறது. வானியல் பாதுகாப்பை பராமரிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், தங்கள் முதல் முழு மாத சம்பளத்தை இழந்திருக்கிறார்கள். இவர்கள் ‘அத்தியாவசிய ஊழியர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், சம்பளம் இல்லாவிட்டாலும், பணியில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பலர் வாடகை மற்றும் மளிகை பொருட்களை சமாளிக்க, ஊபர் ஓட்டுவது, இன்ஸ்டாகார்ட் மூலம் டெலிவரி செய்வது, உணவகங்களில் வேலை செய்வது அல்லது வார இறுதி நாட்களில் பயிற்சி அளிப்பது போன்ற இரண்டாவது வேலைகளை தேடி சென்றுள்ளனர்.
ஏற்கனவே சுமார் 3,000 கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஊதியம் இல்லாமல் பணிபுரிவது அவர்களின் மனச்சோர்வு, மற்றும் கவன சிதறலை அதிகரிக்கும். இது நாட்டின் விமான போக்குவரத்துப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி எச்சரித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இந்த நிலை தொடர்ந்தால், நாடு தழுவிய விமான போக்குவரத்து முடக்கம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம் என்பது, அடுத்த நிதியாண்டுக்கான அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா காங்கிரஸில் நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டது. ஆளுங்கட்சியான குடியரசு கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் செலவினங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் உடன்படாததால், மசோதாவை நிறைவேற்ற தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை.
இதனால், உலகின் பணக்கார நாடான அமெரிக்கா, அரசியல் முடக்கத்தால் தன் சொந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், நன்கொடைகளை கேட்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva