செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு இபிஎஸ்-க்கு தகுதி இல்லை: டிடிவி தினகரன் பாய்ச்சல்!
TV9 Tamil News November 02, 2025 03:48 AM

சென்னை, நவம்பர் 01: அதிமுகவில் செங்கோட்டையனை விட மூத்த நிர்வாகி ஒருவரும் கிடையாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சுயநலம், பதவி வெறியால் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சாடிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை இபிஎஸ் சந்திக்க உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை கண்டித்து செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் A1 போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்தநிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Also read: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!

தேவர் ஜெயந்தியன்று, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் ஒன்றாக சென்றது அரசியலில் புயலை கிளப்பியது. ஏற்கெனவே, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையனிடம் இருந்து கட்சிப் பதவிகளை இபிஎஸ் பதவியை பறித்தார். தொடர்ந்து, ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் ஒன்றாக இணைந்து பொதுவெளியில் அவர் தோன்றியது பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்த நிலையில், கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனை ஒரேநாளில் கட்சியில் இருந்து நீக்கி அதிரடியாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சட்டரீதியாக அணுகும் செங்கோட்டையன்:

இந்நிலையில், இன்று காலை தன்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் A1 போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது முன்வைத்தார். கட்சியின் மூத்த உறுப்பினரான தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நீக்க முடியாது என்றும், இதனை எதிர்த்து தான் சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

செங்கோட்டையனுக்கு வன்மம்:

இதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார். மேலும், செங்கோட்டையன் கோடநாடு விவகாரம் குறித்து பேசியதைப் பார்த்தாகவும், அவருக்கு எந்தளவுக்கு வன்மம் உள்ளது என்று மக்கள் தெரிந்து கொண்டனர் எனவும் கூறினார். அதோடு, திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் திட்டமிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Also read: “கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் தான் A1” செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!

இபிஎஸ்-க்கு தகுதி இல்லை:

தொடர்ந்து, செங்கோட்டையன் நீக்கத்தை கண்டித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு இபிஎஸ்-க்கு தகுதி இல்லை என்பதே உண்மை என்றார்.  1972ல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார், அப்போதிருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்கிறார்.  அதோடு, செங்கோட்டையன் அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அழைப்பு விடுத்தார். பசும்பொன் வந்தபோது கூட, செங்கோட்டையன் எதுவும் அரசியல் பேசவில்லை. நான் தான் செய்தியாளர்களிடம் பேசினேன் என்றார்.

கோடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாமே இபிஎஸ் பதறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், தனக்கு ஜோசியம் எல்லாம் தெரியாது. எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் வீழ்த்தப்படுவார். துரோகம் வீழ்த்தப்படும் என்று ஆருடம் கூறினார். மேலும், திமுகவின் ‘பி’ டீம் என எங்களை சொல்கிறார் பழனிசாமி. ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே பழனிசாமிதான் என்றும்,  2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்காக டம்மி வேட்பாளர்களை நியமித்து 3ஆவது, 4ஆவது இடத்துக்கு அதிமுகவை கொண்டு சென்றதாகவும் சாடியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.