புனேவைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவருக்கு இணையத்தில் ஒரு வித்தியாசமான விளம்பரம் கண்ணில் பட்டது. அதில், “என்னை கர்ப்பமாக்கக் கூடிய ஆண் தேவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மையென நம்பிய அவர், அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட எண்ணைத் தொடர்புகொண்டார்.
பின்னர், அவரிடம் பெண் போல பேசி நடித்த சைபர் கும்பல் அவரிடம் “பதிவு கட்டணம், தனியுரிமை கட்டணம், சேவை கட்டணம்” போன்ற பெயர்களில் பல்வேறு கட்டணங்களை கேட்டு, “பணம் செலுத்தினால் தான் வேலை முடியும்” என நம்ப வைத்தது. இதன் பேரில் அவர் மொத்தம் ரூ.11 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த நபர்களிடமிருந்து எந்த தகவலும் வராமல் போனதால் தான் ஏமாந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசில் புகார் அளித்தார். போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து, அந்த மோசடி கும்பலை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் “இணையத்தில் வரும் இத்தகைய வித்தியாசமான விளம்பரங்களை நம்ப வேண்டாம், தனிப்பட்ட தகவல்களையோ பணத்தையோ பகிர வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக இத்தகைய ஆன்லைன் ஏமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஹைதராபாத்தில் 78 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரிடம் “உங்கள் சிம் கார்டு பயங்கரவாத வழக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்த சம்பவமும், 73 வயது முதிய பெண் ஒருவரிடம் ரூ.1.43 கோடி பறிக்கப்பட்டதும் கவலைக்குரியதாக உள்ளது.
சைபர் குற்றச்செயல்களை எதிர்கொள்வதில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே காவல்துறையின் அறிவுறுத்தல்.