திரிபுரா மாநிலத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும், ரஞ்சி டிராபியின் முன்னாள் ஆல்ரவுண்டருமான ராஜேஷ் பானிக் (வயது 40), சாலை விபத்தில் உயிரிழந்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவின் ஆனந்த்நகரில் நடந்த சாலை விபத்தில் பைக் ஓட்டிக்கொண்டிருந்த ராஜேஷ் பானிக் காயமடைந்து, அகர்தலாவில் உள்ள ஜிபிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இவர், 2002-03 சீசனில் திரிபுராவுக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். மேலும், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதும், மாநில 19 வயதுக்குட்பட்ட அணியின் தேர்வாளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரிபுரா கிரிக்கெட் சங்கச் செயலாளர் சுப்ரதா தேப், “ஒரு திறமையான கிரிக்கெட் வீரரை இழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறி வேதனை தெரிவித்தார். அவரது மறைவுக்கு திரிபுரா கிரிக்கெட் சங்கம் தலைமையகத்தில் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியது.