விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். சிம்புவை வைத்து கெட்டவன் என்கிற படத்தை துவங்கினார். சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் அந்த படம் டிராப் ஆனது. எனவே, மீண்டும் விஜய் டிவிக்கு வேலை செய்ய போய் விட்டார் நெல்சன். அதன்பின் சில வருடங்கள் கழித்து கோலமாவு கோகிலா என்கிற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அடித்தது. விஜய் டிவியில் வேலை செய்யும் போது சிவகார்த்திகேயனுடன் பழக்கம் இருந்ததால் இருவரும் இணைந்து டாக்டர் படத்தை கொடுத்தார்கள். டார்க் ஹியூமர் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்தது.
அதன்பின் விஜயை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கினார் நெல்சன். இதில் ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஒருபக்கம் பல வருடங்கள் கழித்து ரஜினியும் கமலும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை நெல்சனே இயக்கவிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதேநேரம் அதிகாரப்பூர்வமாக இது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஜெயிலர் 2 பற்றி எங்கேயும் பில்டப் செய்து நெல்சன் பேசவில்லை. தேவையில்லாமல் பில்டப் கொடுத்து படம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்வார்கள் என்பது பீஸ்ட் அவருக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
எனவேதான் நெல்சன் அடக்கி வாசித்து வருகிறார். அதேபோல் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தில் இயக்குனர் உறுதியாகவில்லை என சொல்லியிருந்தார் ரஜினி. தற்போது ரஜினியை ஏன் அப்படி சொன்னார் என்கிற காரணம் வெளியே கசிந்திருக்கிறது.
ரஜினியிடம் ‘சார் இப்போது இந்த படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிட வேண்டாம். ஜெயிலர் 2 படம் வெளியாகி என்ன ரிசல்ட் என பார்க்கலாம் அதோடு இந்த படத்திற்கு திரைக்கதை எழுத எனக்கு ஒரு வருடம் தேவைப்படும். நேரம் வரும்போது சொல்லிக் கொள்ளலாம்’ என நெல்சன் கோரிக்கை வைத்தாராம். ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2-வுக்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.