தமிழகத்தில் மோடியும், அமித் ஷாவும் துாய அரசியலை கொடுப்பர் - அண்ணாமலை..!!
Top Tamil News November 02, 2025 08:48 AM

கோவையில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: நகராட்சி நிர்வாகத் துறையில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, ஆதாரங்களுடன் 232 பக்க கடிதத்தை, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. நேருவின் சகோதரர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்களின்படி, இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.

இதுவே, வேறு அரசாக இருந்திருந்தால், ராஜினாமா செய்திருக்கும். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, எப்.ஐ.ஆர்., போட நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்.ஐ.ஆர்., போடாமல், அமலாக்கத் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது. நெல் கொள்முதலுக்கான லாரி கான்ட்ராக்டில், 160 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி வாய் திறக்காத முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் மோடியும், அமித் ஷாவும் துாய அரசியலை கொடுப்பர் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் பயணிக்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியல் கூட்டணி அமைய, இன்னும் காலம் இருக்கிறது. நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன்; பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்கவில்லை என்றால் கிளம்பப் போகிறேன். இன்னும் நான் காத்திருக்க தயார்.

நான் முதல் தலைமுறை அரசியல்வாதி. என்னால் ஒரு கட்சி துவங்கி நடத்த முடியும் என நினைக்கிறீர்களா? மோடி மீது நான் வைத்துள்ள நம்பிக்கை, இம்மியளவும் குறையாது . சில சமயம், தலைவர்கள் சொல்வதால், மனசாட்சிக்கு எதிராக கூட பேசுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம், நல்லது நடக்கும்.

இன்றைக்கும் நான் அ.தி.மு.க.,வை பற்றி பேசவில்லை. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள், என்னை திட்டிக் கொண்டு தான் உள்ளனர்; அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக உள்ளேன். காலம் வரும்போது பேசுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.