தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நேரடியாகப் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதேபோல், விஜய் பாஜக கூட்டணிக்குள் நுழைந்தால் அது திமுகவுக்கு மேலும் வலு சேர்க்கக்கூடும் என்றும் இரு தரப்பினரும் உணர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், பாஜகவின் உயர்மட்டத் தலைமை தமிழக அரசியலுக்கான ஒரு மெகா கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வியூகத்தின் ஒரு பகுதியாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் விஜய், டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால், கடைசி நேரத்தில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.-வின் ஒரு பிரிவையும் இந்தக் கூட்டணியில் இணைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், தேர்தலுக்குப் பிறகு அதிமுக-பாஜக கூட்டணியும், இந்தக் புதிய அணியும் இணைந்து ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவதே பாஜகவின் தமிழகத் திட்டம் என்றும், இந்தச் சதித் திட்டத்தில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் உடந்தையாக இருக்கலாம் என்றும் சில விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.