பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறவுள்ள இரு கட்ட சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டதால், அந்த மாநிலத்தில் அரசியல் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதனை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.இந்நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. அதன்படி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இரண்டாம் கட்ட சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி நடைபெறுகிறது” என குற்றம்சாட்டிய தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு, தியாகராய நகர் ஓட்டல் அகார்டில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வேறுபாடுகளை மீறி அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், “புகைப்படம் இணைத்தல், இணையதளத்தில் பழைய வாக்காளர் பட்டியலை இணைத்தல் போன்ற நடைமுறைகள் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் ஆதார் அட்டை முழுமையான ஆவணமாக ஏற்கப்படாமை ஏன்? குடும்ப அடையாள அட்டையை ஏற்க மறுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,"வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பா.ஜ.க. தமிழகத்தில் தேர்தல் வெற்றிக்காக களமிறங்கியுள்ளது.
பீகாரில் நடந்த மாற்றங்கள் எவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தின என்பதெல்லாம் நாட்டுக்கு தெரியும். தமக்குப் பிடித்த வாக்காளர்களை வைத்துக் கொண்டு, எதிராக இருப்பவர்களை நீக்கும் திட்டமே இது. ஆனால், அந்த முயற்சி தமிழகத்தில் எவ்விதத்திலும் வெற்றி பெறாது” என்று அவர் எச்சரித்தார்.