தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான ஹாசிம் ஆம்லா (Hashim Amla), ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல்-டைம் பிளேயிங் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். சுபங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் பேசிய ஆம்லா, தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தேர்வு செய்தார்.
மூன்றாம் இடத்தில் விராட் கோலி மற்றும் நான்காம் இடத்தில் பிரையன் லாரா ஆகியோருக்கு வாய்ப்பளித்துள்ளார். ஐந்தாம் இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏ.பி.டி வில்லியர்ஸ், ஆறாம் இடத்தில் ஜாக் காலிஸ் (All-Rounder) ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
விக்கெட் கீப்பர் மற்றும் ஏழாவது வீரராக மகேந்திர சிங் தோனியை ஆம்லா தேர்ந்தெடுத்துள்ளார். பந்துவீச்சாளர்களாக முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆம்லாவின் இந்தத் தேர்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மூன்று இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரரும், அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை (264 ரன்கள்) வைத்திருப்பவருமான இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுக்கு ஆம்லா தனது அணியில் இடம் கொடுக்கவில்லை.
சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சதம் அடித்து மிரட்டிய நிலையில், ஆம்லாவின் அணியில் அவருக்கு இடம் கிடைக்காதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.