ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நவம்பர் 2ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தித் தங்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்றதற்காக ஐசிசி-யிடமிருந்து ₹40 கோடி, பிசிசிஐ-யிடமிருந்து வீரர்களுக்கும், ஆதரவு ஊழியர்களுக்கும் கூடுதலாக ₹51 கோடி எனப் பெரும் ரொக்கப் பரிசுகள் குவிந்தன.
இந்நிலையில், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), மகளிர் அணிக்கு ஓர் உருக்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “உறுதியளிக்கப்பட்ட சில பரிசுகள் உண்மை ஆகவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
தனது மிட்-டே (Mid-Day) பத்திரிகை கட்டுரையில் கவாஸ்கர், “இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வெற்றியாளர்களின் புகழைக் கடன் வாங்கி, இலவச விளம்பரத்தைப் பெற, விளம்பரதாரர்கள் மற்றும் தனிநபர்கள் விரைவாகக் குதிப்பார்கள். அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முழுப் பக்க விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பாருங்கள்.
அணிக்கு ஏற்கெனவே ஸ்பான்சர்களாக இல்லாதவர்கள், வெட்கங்கெட்ட முறையில் தங்கள் பிராண்டை மட்டுமே விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார்கள்,” என்று விமர்சித்துள்ளார். 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோதும், தனக்கும் தன் அணியினருக்கும் செய்யப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்ற தனது சொந்த அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், “பல தசாப்தங்களுக்குப் பிறகு, சாதாரண இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பும் பாசமுமே எங்கள் மிகப்பெரிய செல்வம். உங்களுக்கும் அதுதான் மிகப்பெரிய செல்வமாக இருக்கும். தேசம் உங்களைப் பற்றிப் பெருமை கொள்கிறது,” என்று அணிக்கு வாழ்த்தி தனது கட்டுரையை முடித்துள்ளார்.