இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான பயிற்சிப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி, தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.
முதல் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணி 417 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை 98 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஓரளவு சிறப்பாக பந்துவீசியபோதும், ஆகாஷ் தீப் (22 ஓவரில் 106 ரன்கள்), குல்தீப் யாதவ் (17 ஓவரில் 81 ரன்கள்) உள்ளிட்டோர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தத் தோல்வியின் விளைவாக, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்காகக் காத்திருக்கும் முகமது ஷமி போன்ற ஒரு மூத்த சிறந்த பந்துவீச்சாளருக்கு தென்னாப்பிரிக்கத் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இளம் தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்துள்ளனர்.

“ஷமியை ஓரங்கட்டிய தேர்வுக் குழுவுக்கு இது ஒரு நல்ல பாடம்” என்றும், “ஆகாஷ் தீப்பிற்குப் பதிலாக ஷமிக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்” என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஷமிக்கு தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் வாய்ப்பு கிடைக்காதது அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.