பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு பொறுப்பேற்ற போதிலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தச் சம்பவத்திற்கு ஆதாரமின்றி இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் “இந்தியாவால் தூண்டப்பட்ட பயங்கரவாதப் பினாமிச் செயல்கள்” மற்றும் “பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது” என்று அவர் கண்டித்துள்ளார்.

மேலும், இதே வலைப்பின்னல்தான் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து செயல்பட்டு, முன்னர் வானா நகரில் குழந்தைகளைத் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து இந்திய ஆதரவுடன் நடத்தப்படும் இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நிரந்தர அமைதி சாத்தியம் என்பதை காபூல் ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் ஷெரீஃப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புதிய தாக்குதல், அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை மோதல்கள் மற்றும் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.