நடிகர் கோவிந்தா மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய நினைவை இழந்த நிலையில், வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.
நடிகர் கோவிந்தா, செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சோர்வுற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞரும் நண்பருமான லலித் பிந்தால் தெரிவித்துள்ளார்.
தற்போது கோவிந்தாவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது தரப்பு உறுதி செய்துள்ளது.
மருத்துவமனையில் அவருக்குத் தேவையான அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, மருத்துவர்கள் தற்போது நரம்பியல் நிபுணரின் ஆலோசனையையும் பரிசோதனை முடிவுகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.