மாணவர்களை மாநிலத்திற்குள் அல்லது வெளியே சுற்றுலா என்கிற பெயரில் அழைத்து செல்லக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை கடும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். எழிலரசி தலைமை வகித்தார். தனியார் பள்ளி கல்வி அலுவலர் ஜோதி முன்னிலை வகித்தார்.
சென்னையில் நடைபெற்ற கல்வித் துறை ஆய்வுக்கூட்டத்தில் கூறப்பட்ட அறிவுறுத்தல்களை இந்த கூட்டத்தில் விளக்கினர். அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை மாணவர்களால் நேரடியாக பாடப்பட வேண்டும்; ஒலிபெருக்கி வழியாக ஒலிபரப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி பேருந்துகளில் மாணவர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேண்டும்; ஒவ்வொரு வாகனத்திலும் பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மாணவர்களை உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக யாரும் துன்புறுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டது.
மேலும், பள்ளி வளாகத்தின் நுழைவாயில், வகுப்பறைகள், நூலகம், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஒலிப்பதிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அந்த பதிவுகள் குறைந்தது இரண்டு மாதங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது; கல்வித் துறையின் அனுமதி இல்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முக்கியமாக “மாணவர்களை கல்விச் சுற்றுலா என்ற பெயரில் எங்கு சென்றாலும் அனுமதி இல்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் பள்ளி நிர்வாகத்துக்கே இருக்கும்” என கல்வித் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும் பள்ளிகளுக்கு பணிக்கப்பட்டது. மேலும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் சி.ஆர். ராஜேஷ் கண்ணன், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!