திடுக்கிடும் தகவல் : தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..?
Top Tamil News November 12, 2025 08:48 PM

டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என தெரியவந்துள்ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உமர் முகமது நபியின் நண்பர் முசம்மை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.அதில் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாகயும், ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டதாகவும் அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியை நோட்டமிட்டு வந்ததாக கூறினார். இதற்காக ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் பலரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசாரின் சந்தேக பார்வை, டாக்டர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மீது விழாது என்பதால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதுவரை, 6 டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஷா ஹரிசிங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் தஜமுல் கைது செய்யப்பட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.